செவ்வாய், 15 மார்ச், 2016

நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் ?

நாம் நினைக்கின்றவை   ,பல  வானத்து  மீன்களிலும் பல,  நாலடியாரில் "வானத்து மீனிற் பல"  என்று வரும்  தொடரை நினைவிற்குக் கொண்டுவாருங்கள்.

அவற்றுள் சில நடைபெறுவன.  பல நடைபெறா தொழிவன ஆகும் .

எல்லாம் நடைபெற்றுவிட்டால்  எல்லாவற்றையும் நீங்களே தீர்மானித்துவிட்டீர்கள்  யாவும் உங்களாலேயே நடைபெறுகின்றன என்று பொருள். மன்னிய  ( நிஜமான )  மனித  வாழ்வில் இப்படி நடைபெறுவதில்லை.

நடைபெறாப் பொழுதில் நீங்கள்  துவண்டுபோவது உங்கட்கே தெரியும் 

நினைப்பவை பலவாயினும் அவற்றையெல்லாம் ஒரு மூட்டையில் போட்டுக் கட்டி ஒருமையில்  சுட்டிப் பாடியுள்ளார்   கவியரசர். எல்லாம் என்ற சொல் நினைத்தவை பல என்று தெளிவாக்குகிறது.

நீங்கள்  போட்ட திட்டங்களைத் தீர்மானிப்பது வேறோர் ஆற்றல். நடவாப் பொழுதில் அவற்றை restraining forces என்கிறார்கள். கவியரசர் அதைத் தெய்வம் என்று ஒருமைப்படுத்திப்  பாடுகிறார்.

Restraining  forces   என்பவற்றை  ஒன்றாக்கி  உருவகப்படுத்திச்  சில வேளைகளில் கணபதி  என்பதுண்டு.  சிவனின் தேரினது  அச்சையே பொடிசெய்த  அதிதீரன் என்று நம் இலக்கியங்கள் அவனப் புகழ்கின்றன. கணபதியாரை உங்கள் மனத்துள் தீவிரமாக எண்ணித் , தடைகளை மாற்று மாற்று மாற்று என்று திரும்பத் திரும்பச் சொன்னால்   (இதைத்தான் மந்திரம் என்கிறோம் )   அந்தத்  தடைகளைத் தாண்டுவதற்குக்  கதவுகள் திறக்கும்.(தட்டுங்கள் திறக்கப்படும் என்றார்  ஏசு நாதர் ).  அது திறக்குமோ இல்லையோ  நீங்கள்  திண்மை பெறுவீர்கள்.  அப்புறம் என்ன நடக்கும்?

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

என்பது குறள். தெய்வத்தான்  ஆகாது எனினும்  மெய்வருத்தக் கூலியாவது கிடைக்குமே!

மெய்வருத்தக் கூலிக்காகவாவது கணபதியைக்  கும்பிடுங்கள். அல்லது உங்கள் இட்ட தெய்வம்  (நீங்கள் மனத்துள் இட்டுவைத்துள்ள* தெய்வம் )  எதுவோ அதைக் கும்பிடுங்கள்.   திண்ணியர் ஆவீர்.

----------------------------------------------------
*As you are now with me reading this,  also learn etymology on the fly.

கருத்துகள் இல்லை: