வியாழன், 17 மார்ச், 2016

தமிழும் சகரமும்

பிற்காலத்துத் தமிழில் பல சகர வருக்கத்துச் சொற்கள் திரிபுகளின் காரணமாக வளர்ச்சி பெற்று மொழியில் இடம்பிடித்தன.. இத்தகைய பல திரிபுகளை முன்னர் எடுத்துக்காட்டியதுண்டு, ஆனால் சிலர்க்கு அவை மனத்துள் பதிவுறாமலோ மறதியாகவோ இருத்தல் கூடும். ஆகையால் மீண்டும் எழுதுகிறோம்.இந்தச் சொற்கள் இலக்கணக் கதிரவனாகிய தொல்காப்பியரின் காலத்திலும்  இருந்து அவர் அவற்றை
ஏற்றுக்கொள்ளமுடியாத திரிபுகளாய் ஒதுக்கியிருக்கலாம். ஏன்?  சகர முதலாகச் சொற்கள் வரா என்று அவர் பாடியதாய்க் கருதப்படுதலால்.
அவர் பாடினாரா, பிற்காலத்து ஏடெழுதினவர்கள் குருட்டுத்தனமாகப் பகர்ப்புச் செய்துவிட்டனரா என்பதை ஆய்தல் வேண்டும். எழுத்துக்காரனும் தவறக்கூடும். இவர்கள் கடவுள்கள் அல்லர்.

நன்னூலாரும் மயிலை நாதரும் இலக்கணப் பெரும்புலிகள். இவர்கள் சகர முதலாய்ச் சொல் தொடங்காது என்ற கருத்தைச் சொல்லவில்லை.  அவர்கள் படித்த தொல்காப்பியச் சுவடியில் அத்தகைய விதி இல்லாமல் இருந்திருக்கலாம்.  இருந்து அதை ஒதுக்கியுமிருக்கலாம்,

இதன்  தொடர்பான தொல்காப்பிய நூற்பாவிலும் பாடவேறுபாடுகள்
உள்ளன. அதனாலும் சகரமுதலாகச் சொல் அமையாது என்ற கருத்து ஒதுக்கப்படவேண்டியதாகிறது. காரணங்கள் இன்னும் பல.

அடுதல் =  நெருப்பிலிடுதல்.

அடு+ இ =  அட்டி.
அட்டி > சட்டி.

அமணர் >  சமணர்.

அடுத்துச் சென்றாலே ஒருவனை அடிக்கலாம். அல்லாமல் அடித்தல்
இயலாது. ஆகவே அடுத்தற் கருத்தில் அடித்தல் கருத்து தோன்றியது.

அடு >  அடி.

அடு>  (சடு)*  >  சாடு.  சாடுதல்.  ( சொல்லடித்தல்). (மலையாளத்தில்  அடித்தல் ).

(சடு) > சடுகுடு. (அடுத்துச் சென்று பிடிக்கும் விளையாட்டு).

அடு >  அண்டு >  (சண்டு)*  >  சண்டை.
சண்டமாருதம் = வந்து மோதும் காற்று.
சண்டப்பிரசங்கம் =  இடிசொற்பொழிவு.  மோதல்பேச்சு

அண் >  சண் >  சண்ணுதல்  (தாக்குதல் , புணர்தல் )
அண் >  சண் >   சண்ணித்தல் ( ஒருவனை அல்லது ஒன்றைச் சார்பாககக் கொள்தல் )

*சில இடைத்தோற்றச் சொற்கள் (பிறைக்கோடுகளில் ) மொழியில் தாமே நிற்கும் வலுவிழந்து கூட்டுச் சொற்களுடனேயே வாழ்தல் மொழியியல்பு.

வெட்டவெளிச்சம்: இதில் வெட்டம் என்ற சொல் மலையாளத்தில் தனிவாழ்வும் தமிழில் கூட்டுச்சொல் வரவுடையதாயும் உள்ளது.

அடுத்தல் கருத்தில் சில கூறினோம்.  பிற பல.


இப்படி ஏராளமாக இருத்தலால்  பல  சகர முதல் சொற்கள் அகர முதலில் இருந்து திரிந்தவை என்பது மிக்கத் தெளிவாகிறது.

விரித்து எழுதினால் நீண்டுவிடும். மற்றவை இனி

தமிழும் சகரமும் 

கருத்துகள் இல்லை: