ஞாயிறு, 31 டிசம்பர், 2017

புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்

பதினெட்டில் எட்டிடுமே இனிமை எல்லாம்
பாரினிலே முட்டிவரும் இடர்கள் நீங்கி
மதிவட்டம் வானிலொளி வீசு மாப்போல்
மணிபொன்போல் பூவுலகில் வாழ்வு மேலும்
அதிவெட்டம் மேவிடுக அன்பு ஓங்க
அனைத்தமைதி அம்மைதரப் போற்றிக்கொள்வோம்;
சதிகெட்டுத் துயரற்ற சால்பு மிக்கச்
சரிநிகராம் வாழ்வினையே பெற்று வாழ்வோம்.


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஞால
நிலையிருக்கும் காறும் தமிழ்.


வெட்டம் =  ஒளி.
வெட்ட வெளிச்சம் என்ற மரபுத் தொடரில் இதைக் 
காணலாம்.

சனி, 30 டிசம்பர், 2017

சரக்கு என்பன உலர்ந்து கிட்டும் பொருள்கள்


இன்று சரக்கு என்ற சொல்லை ஆய்வுப்படுத்திப் பொருளறிவோம்.

இங்கு முதலாக வைத்துச் சிந்திக்கப்படுவது: சருகு என்ற சொல்:

சருகு என்பது காய்ந்த இலைகளைக் குறிக்கிறது.  இதில் கு என்பது சொல்லாக்க விகுதி.  அடிச்சொல்:   "சரு" என்பதே.

அகர - சகர வருக்கத் திரிபு

அகர வருக்கத்தில் உள்ளவை சகர வருக்கமாகத் திரியுமென்பதைப் பல இடுகைகளில் தெரிவித்திருந்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

எனவே சரு என்பதன் முன்வடிவம் அரு என்பது.

அருகல் (அருகு+ அல்)  என்பது: குறைதல்அணைதல், கிட்டுதல், சுருங்குதல் என்ற பொருள்களும் மற்றப் பொருள்களும் உடைத்தாம்.


நீர் குறைந்தாலே சுருங்குதல் உண்டாகும்.  காய்ந்த இலைகள் சுருங்கும்.  எனவே அருசரு > சருகு என்பது பொருந்துகிறது.

அரு: நீர் அருகுவதுமாம்.    அரு> சரு.  One of the meanings; this is then the point.

நீங்கள் நினைவிலிருத்த வேண்டியது:   அகர வருக்கமென்றால் அகரம் தொடங்கி ஒளகாரம் வரையுள்ள வருக்க எழுத்துக்களும் ஒலிகளும். வருக்கம் -  தொடர்வரு எழுத்து ஒலி ஆகியன.  சகர வருக்கமெனின் இங்கனமே கொள்க.
வரு > வரு+ கு+ அம் =  வருக்கம். தொடர்வருகைக்குரியது.

அரு > சரு > சருகு.
இங்கு  கு என்பது விகுதி.

சரக்கு

சரக்கு என்பது பெரும்பாலும் உலர்ந்த அல்லது காய்ந்த பொருட்கள்.
சரு >  சரு+ அ+ கு =  சரக்கு.
இதை வாக்கியமாக்கினால்,  காய்ந்து அங்கிருப்பது என்று வரும்.

அ =  அங்கு.
கு :  விகுதி.  சேர்விடம் குறிக்கும் சொல்லுமாகும்.

சரிதல் என்ற சரு என்பதனடி வினைச்சொல்லும் உதிர்தலையும் குறிக்கும்.  காய்ந்தது உதிருமாதலின், இது சரு என்ற அடியுடன் தொடர்பு உள்ள சொல்.  

சரு+இ = சரி > சரிதல்.  (வினையாக்கம்.)

ஓ.நோ: உது + இ = உதி + தல் = உதித்தல்.  
அது இது உது என்பவற்றுள் உது என்பது முன்னிருப்பது முன் தோன்றுவது எனக் காண்க.  

சரித்தல் என்பது வெட்டிவீழ்த்துதல் குறிக்கும்.  செடி கொடி மரங்கள்  வீழ்த்தியபின்  பெரும்பாலும் காய்ந்துவிடுதலால், இது முரண்படாச் சொல். மனிதத் தலையீட்டினாலன்றிக் கிடக்குமிடத்தில் காய்ந்துவிடுதலை அடையும்.

சருவுதல்:  சரிதலுமாகும்.

சரக்கு என்பது காய்ந்தபின் கிட்டுதலும் குறிக்கும். இதன் காரணம் சரிதல் என்ற தொடர்புடைய சொல், கிட்டுதல் என்ற பொருளுடையதாயுமுள்ளது.    

எனவே சரு என்பதனடிச் சொற்கள் யாவும் உலர்தல் தொடங்கி ஏனைப் பொருள்களால் ஒரு முரணற்ற தொடர்பினைக் காட்டுவன என்று உணர்க.  சருவுதல் என்ற சொல்லும் உள்ளது. சரிதல் கிட்டுதலென்பவையும் இதன் பொருளாம்.

ஆகவே அரு என்பது மூலமென்றும் சரு என்பது அடியென்றும் அறிந்து,  சரக்கு என்பதன் பொருளறிந்து இன்புறுக.

அரு, சரு என்பன உரிச்சொற்கள்.  பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் உரிமை பூண்டு வருவனவே உரிச்சொற்கள்.  அதாவது பெயரும் வினையும் தோன்றும் நிலைக்களனாகுபவை.
எடுத்துக்காட்டு:

பழ என்பதோர் உரிச்சொல்.
பழங்  கள் ( பழைய கள்)
பழ> பழு:  வினையாக்கம்  பழுத்தல்.  முன்னதான காய் பின்னர் தன்னிலை மாறுதல்.  கனியாகிறது.
பழ+ மை =  பழமை ( பழையதாகிவிட்ட தன்மை)  பெயராக்கம்.

பழ> பழி;  முன்னாளில் நடந்த கெடுதலைச் சொல்லி  பின்னாளில் மதிப்பைக் குறைத்துப்   பேசுதல்.  அடிப்படைக் கருத்து: பழமைச் செயல். கெடுதல் முன்னும் அதுபற்றிய தீமைப் பேச்சு பின்னும் வருவன.

சரக்கு என்பது இன்று விலைக்குரிய பொருளென்ற உலகவழக்கினால் ஏற்பட்ட பொதுப்பொருளைக் காட்டுகின்றது.  இது அதன் சொல்லமைப்புப் பொருளன்று.



(மறுபார்வை செய்யப்படும்.)